நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நிகில் போட்டியிடுவாரா? முதல்-மந்திரி குமாரசாமி பதில்


நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நிகில் போட்டியிடுவாரா? முதல்-மந்திரி குமாரசாமி பதில்
x
தினத்தந்தி 6 March 2019 4:45 AM IST (Updated: 6 March 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதில் கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்,

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதில் கூறியுள்ளார்.

பால்பண்ணை அடிக்கல் நாட்டு விழா

கோலார் தாலுகா உத்தூர் பகுதியில் கோலார்-சிக்பள்ளாப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ.160 கோடி செலவில் பால்பண்ணை ஒன்று புதிதாக அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பால்பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் மந்திரிகள் கிருஷ்ண பைரே கவுடா, சிவசங்கரரெட்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்பு முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிர்ணயிப்பது மக்கள் தான்

தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தல் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்வது, விரோத போக்கில் செயல்படுவது, பின்னர் ஆதரவு தெரிவிப்பது எல்லாம் சகஜம் தான். ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் தேவேகவுடா போட்டியிடுவதை, முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.மஞ்சு எதிர்த்து வருகிறார். ஒருவேளை தேவேகவுடா போட்டியிட்டால், நானே அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ஏ.மஞ்சு அறிவித்துள்ளார்.

எல்லோரும் ஒருவருக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மக்கள்தான். எனது மகன் நிகில், நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிடுவாரா? என்று கேட்கிறீர்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும். அதன்பிறகு இந்த கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.

கே.சி.வேலி திட்டம்

நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கே.சி.வேலி குடிநீர் திட்டம் பற்றி குறை கூறியிருந்ததாக குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறார்கள். நான் எப்போதுமே கே.சி.வேலி திட்டத்தை குறை கூறியதில்லை. கே.சி.வேலி திட்டம் மூலம் பெங்களூருவில் இருந்து 2 முறை சாக்கடை நீர் சுத்திகரிக்கப்பட்டு கோலாருக்கு அனுப்பப்படுகிறது. அதை 3-வதாக ஒருமுறை சுத்திகரித்து பின்னர் கோலாருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உமேஷ் ஜாதவ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முடிவில் பா.ஜனதாவினர், உமேஷ் ஜாதவ்வை ராஜினாமா செய்ய வைப்பதில் வெற்றி கண்டுவிட்டனர். இதுபற்றி நான் மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story