தாராவியில் தமிழ்ப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை மகன்கள் கண்முன்னே துயரம்
தாராவியில் தமிழ்ப்பெண் தனது மகன்கள் கண்முன்னே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
தாராவியில் தமிழ்ப்பெண் தனது மகன்கள் கண்முன்னே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்
மும்பை தாராவி போலீஸ் நிலையம் எதிரில் உள்ள கம்பாதேவி ரோடு ராஜேந்திர பிரசாத் சாலில் வசித்து வருபவர் மோசஸ். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பானாங்குளம். இவர் சயானில் உள்ள பிரபல தனியார் சமோசா கடையில் வேலை பார்த்து வருகிறார்.
மோசசின் மனைவி ஜெயந்தி (வயது 35). இவர்களுக்கு மால்வின் மற்றும் மெல்வின் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் 4 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வருகின்றனர். ஜெயந்தி தாராவியில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தூக்கில் தொங்கினார்
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஜெயந்தி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மகனின் ஒரு நோட்டு புத்தகம் மற்றும் பேனாவை வாங்கி கொண்டு வீட்டின் மேல்தளத்துக்கு சென்றார். அப்போது சிறுவர்கள் இருவரும் தரைதளத்தில் படித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மேல்தளத்தில் தாய் அலறும் சத்தம் கேட்டு இருவரும் மேலே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டு உத்தரத்தில் ஜெயந்தி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
அதிர்ச்சியில் உறைந்த மகன்கள்
தாய் தூக்கில் தொங்குவதை பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மோசஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் சிறுவர்கள் இருவரும் உடல் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தனர். தந்தையை பார்த்ததும் கதறி அழுதபடி ஓடி வந்தனர்.
அதன்பின்னர் தான் மோசசுக்கு மனைவி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மேல்தளத்துக்கு ஓடிச் சென்று பார்த்தார்.
போலீஸ் விசாரணை
அங்கு ஜெயந்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். மனைவியின் உடலை பார்த்து மோசஸ் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் வந்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story