புதுவையில், ஜூன் 5-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
புதுவையில் வருகிற ஜூன் 5-ந் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் மாதம் 5-ந் தேதி முதல் தடை விதிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இதற்கான மாற்று பொருட்களை அளிப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தலைமையில் நடந்தது.
இதில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் ஸ்மிதா, தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், இயக்குனர் பிரியதர்ஷினி, தொழில் மைய அதிகாரி அழகிரி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
படித்த மகளிருக்கு துணிப்பை, காகிதப்பை உற்பத்தி செய்வது குறித்து ஊரக வளர்ச்சித்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) ஏம்பலம், கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் கிராமங்களில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) புதுவையில் பல பகுதிகளிலும், காரைக்காலிலும் பயிற்சி முகாம் நடைபெறும். இதற்கான பயிற்சி தொகையை புதுவை மாசு கட்டுப்பாட்டு குழுமம் வழங்கும். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story