பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு, ஜிப்மர் ஆஸ்பத்திரியில் டாக்டர்களிடம் போலீசார் விசாரணை - பாதுகாப்பு கேட்டு மாணவர்கள் போராட்டம்
புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் குறித்து டாக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி,
புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்ய தனி அறைக்கு அழைத்துச்சென்ற ஒரு டாக்டர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறியடித்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் டாக்டர் மீது அந்த பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் யார்? என அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் நேற்று கோரிமேடு போலீசார் விசாரணை செய்தனர். மேலும் நேற்று பணியில் இருந்த டாக்டர்களின் விவரங்களை போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஜிப்மரில் பணியாற்றும் டாக்டர்கள், ஊழியர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பொய்யான புகார்கள் அளிக்கப்படுவதாகவும் கூறி ஆஸ்பத்திரியின் நிர்வாக கட்டிடத்தின் முன்பு பயிற்சி டாக்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்றுக் காலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். போராட்டம் காரணமாக சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
போராட்டம் நடத்தியவர்களிடம் ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மற்றும் கோரிமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை தொடர்ந்து மாலை 4 மணி அளவில் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.
Related Tags :
Next Story