ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு 200 இடங்கள் (புதுவை 150, காரைக்கால் 50) உள்ளன. இதில் 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு இன்று (புதன்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 12.4.2019 கடைசி நாள் ஆகும். நுழைவுத்தேர்வு 2.6.2019 அன்று இந்தியா முழுவதும் 120 நகரங்களில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மே மாதம் 3-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு 26.6.2019 முதல் 28.6.2019 வரை நடைபெற உள்ளது. 2-வது கட்ட கலந்தாய்வு 24.7.2019 அன்றும், 3-வது கட்ட கலந்தாய்வு 21.8.2019 அன்றும் நடைபெற உள்ளது. இறுதி கட்ட கலந்தாய்வு 26.9.2019அன்று நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் 30.9.2019.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story