குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க ஸ்மார்ட் கார்டு
போக்குவரத்துத்துறை சார்பில் வழங்கப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகள் மூலம், போக்குவரத்து விதிமீறல், குற்றங்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
போக்குவரத்துத்துறை சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஓட்டுனர் உரிமம், பதிவுச்சான்றிதழ், வர்த்தக வாகன பதிவுச்சான்றிதழ், கடன் சான்றிதழ், கடன் ரத்து சான்றிதழ், பெயர் மாற்றம் உள்ளிட்ட போக்குவரத்து அலுவல் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட் கார்டில் வாகனத்தின் பதிவெண், என்ஜின் எண், வடிவமைப்பு எண், செல்லுபடியாகும் காலம், வாகன உரிமையாளரின் பெயர், தகப்பனார், கணவர் பெயர், முகவரி, வரிசை எண், பதிவு செய்யப்பட்ட தேதி அல்லது உரிமம் வழங்கப்பட்ட தேதி, வாகனத்தின் தன்மை(பெட்ரோல், டீசல்), எதற்காக கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம், கியூ.ஆர்.கோடு, எலெக்ட்ரானிக் சிப் கார்டு, அரசின் முத்திரை பதித்த ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஆகியன இடம்பெற்றுள்ளன.
கார்டின் பின்புறத்தில் கார்டு எண், வாகனத்தின் வகை, பதிவெண், வாகன தயாரிப்பாளர், மாடல், வாகனம் தயாரிக்கப்பட்ட தேதி, வாகனத்தின் அளவு, நிறம், வாகன கட்டமைப்பு குறித்த விவரங்கள்(பயணிகள் வாகனம், சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம்), என்ஜின் தொழில்நுட்பம், இருக்கைகளின் எண்ணிக்கை, வாகனத்தின் எடை, வரி செல்லுபடியாகும் காலம், வட்டார போக்குவரத்து அலுவலரின் கையொப்பம் ஆகியன இடம் பெற்றுள்ளது.
வங்கிக்கடன் பெற்றிருந்தால், வங்கியின் பெயர் இடம் பெற்றிருக்கும்.
ஓட்டுனர் உரிமத்தில் மட்டும் வாகன உரிமையாளரின் புகைப்படம் இடம்பெறும். இந்த கார்டில் தற்போது, கியூ.ஆர். கோடு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. அதனை ஸ்மார்ட் போனில், கம்ப்யூட்டரில் உள்ள கேமரா மூலம் ஆன்லைனில் சரிபார்த்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது, கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் ஸ்மார்ட் போன் திரையில், கம்ப்யூட்டர் திரையில் தெரியும்.
ஸ்மார்ட் கார்டில் இடம்பெறும் விவரங்கள் அனைத்தும் மத்திய போக்குவரத்து இயக்குனரகம், மாநில போக்குவரத்துத்துறை, போலீஸ் ஆகிய துறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால், விபத்து, போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட் கார்டு கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. அதாவது, வழக்கமான நடைமுறை கட்டணத்துடன் கார்டுக்கு தனியாக ரூ.200 செலுத்த வேண்டும்.
இதற்கிடையே, ஆன்லைன் நடைமுறையில் நிறைய சிரமங்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இன்சூரன்சு நிறுவனங்கள், வங்கிகள் ஆகியன கியூ.ஆர்.கோடு உருவாக்காமல் வழக்கமான பவடித்தை தருவதால், ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடிவதில்லை.
எனவே, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இதுகுறித்து கடிதம் மூலம் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
ஒரு சில வங்கிகள், வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த விவரங்கள் அவர்களுக்கு தெரியாததால், புரோக்கர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் வாகன ஓட்டிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் குறைகளை களைந்து எளிமையான முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அதேபோல, ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்களின் அடிப்படையில், வாகன சோதனை செய்வதற்கான பணிகள் முழுமை பெறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story