வார்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.60 ஆயிரம் சிக்கியது; சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை


வார்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.60 ஆயிரம் சிக்கியது; சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2019 10:56 PM GMT (Updated: 2019-03-06T04:26:52+05:30)

மதுரை மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.60 ஆயிரம் சிக்கியது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை, 

மதுரை காந்திமியூசியம் அருகே மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 43, 44-வது வார்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுகாதார ஆய்வாளராக இளையராஜா(வயது 44) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சிக்கு வரிசெலுத்தும் வணிகர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

மேலும் இதுதொடர்பாக வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகள் சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளித்தனர்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு திடீரென்று மாநகராட்சியின் அந்த வார்டு அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, கண்ணன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளையராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வார்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story