சேலத்தில், 2 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் - தற்காத்துக்கொள்ள கலெக்டர் ரோகிணி அறிவுரை


சேலத்தில், 2 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் - தற்காத்துக்கொள்ள கலெக்டர் ரோகிணி அறிவுரை
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கி உள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம்,

சேலம் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வழக்கத்தை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலையை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

தாகம் இல்லாவிட்டாலும், மக்கள் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும். லேசான ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் ஆடைகளை அணிதல் வேண்டும். வீட்டின் ஜன்னல், கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்து வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்ல வேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை சாறு, மோர், உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழ ரசங்கள் போன்றவைகளை பருக வேண்டும். வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.

அதிகபட்ச வெப்பநிலையை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் மதியம் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். மது, தேனீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story