பேட்டரியில் ஓடும் போல்ஸ்டார் கார்
வோல்வோ குழுமத்திலிருந்து பிரிந்த பிராண்டான போல்ஸ்டார் தற்போது முழுவதும் பேட்டரியில் ஓடும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் 408 ஹெச்.பி. திறன் கொண்டது.
சர்வதேச அளவில் பேட்டரி கார்கள் என்றாலே டெஸ்லா கார்கள்தான் முன்னிலையில் உள்ளன. அதற்குப் போட்டியாக இந்தக் காரை உருவாக்கியுள்ளது. இந்தக் கார் பார்ப்பதற்கு வோல்வோ எஸ்90 மாடல் காரைப் போலவே உள்ளது. 5 கதவுகளைக் கொண்ட ஹாட்ச்பேக் மாடலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் வோல்வோ காம்பாக்ட் மாடுலர் ஆர்கிடெக்சர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இதே பிரிவில்தான் வோல்வோ எக்ஸ்.சி.40 மாடல் காரும் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இரண்டு ஆக்சில்களில் வைக்கப்பட்டு நான்கு சக்கரங்களையும் சுழலச் செய்கிறது. இதில் 78 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி கீழ் பகுதியில் உள்ளது. இதனால் அதிர்வு குறைகிறது. இது 408 ஹெச்.பி. திறன் 660 நியூட்டன் மீட்டர் டார்க் சக்தியை வெளிப்படுத்தக்கூடியது.
இதனால் 100 கி.மீ. வேகத்தை 5 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் தொட்டுவிட முடியும். பேட்டரி வாகனங்கள் வேகமாக செல்லாது என்ற கூற்றை டெஸ்லா நிறுவனம் தகர்த்தது. தற்போது அந்த வரிசையில் போல்ஸ்டார் கார்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் கூகுளின் பல சேவைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் அசிஸ்ட், கூகுள் மேப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தையும் 11 அங்குல தொடு திரையில் காணலாம். உங்களது ஸ்மார்ட்போனையே இந்தக் காருக்கான சாவியாக பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. இது தவிர பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது. ஜெனீவா கண்காட்சியில் இடம்பெற உள்ள இந்த கார் விரைவிலேயே சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story