வேலூரில் கோலாகலம் மயானக் கொள்ளை விழாவில் 40 அடி உயரமுள்ள தேர்கள் பவனி ஆடு, கோழிகளையும் கடித்தவாறு பக்தர்கள் ஊர்வலம்


வேலூரில் கோலாகலம் மயானக் கொள்ளை விழாவில் 40 அடி உயரமுள்ள தேர்கள் பவனி ஆடு, கோழிகளையும் கடித்தவாறு பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 6 March 2019 1:53 PM GMT)

வேலூரில் நடந்த மயானக் கொள்ளை விழாவில் 40 அடி உயர தேர்கள் பவனி வந்தன. பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்தவாறு ஊர்வலமாக வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் மாசி மாத அமாவாசை தினத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா முக்கியமானதாகும்.

இந்த ஆண்டுக்கான மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி முதல் நாள் இரவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டனர்.

விழாவுக்காக பக்தர்கள் கடந்த 2 நாட்களாகவே தயாராகி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேலூர், சைதாப்பேட்டை, ஓல்டுடவுன், தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, கழிஞ்சூர், விருதம்பட்டு, மோட்டூர் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து தேரில் மேளதாளங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.

ஊர்வலத்தின்போது பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பல்வேறு வகையான கடவுள் போன்று வேடமிட்டு சென்றனர்.

பலர் காளியம்மன் போல வேடமிட்டு, கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோ‌ஷமாக ஆடிச்சென்றது தத்ரூபமாக இருந்தது. ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டும் சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும் பெண்கள் ஆடு, கோழியை கடித்து ரத்தம் குடித்தபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அந்தந்தப் பகுதியில் உள்ள மயானத்தை அடைந்தது.

வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் பாலாற்றங்கரைக்கு சாமியுடன் ஊர்வலமாக சென்றனர். அங்கு, மணல் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூரையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் தங்கள் முன்னோர்கள் சமாதிகளுக்கும் சென்று வணங்கினர்.

பின்னர் தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவிலில் அம்மனை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர், காட்பாடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுபோல மயானக்கொள்ளை தேர் ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் உடன் சென்றனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பாலாற்றங்கரையில் மயானக்கொள்ளை நடந்தது. மாலை 3 மணி முதல் காட்பாடி, விருதம்பட்டு, வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து அம்மன் தேர்கள் வரிசையாக விருதம்பட்டில் இருந்து பாலாற்றுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தத் தேர்கள் சுமார் 40 அடி உயரத்திற்குமேல் இருந்தது. மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டு பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

தேர்களை பார்க்கவும், தரிசனம் செய்யவும் பாலாற்று பாலத்திலும், ஆற்றுப்பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வேலூரில் இருந்து காட்பாடிக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் பழைய பாலாற்று பாலம் வழியாக இயக்கப்பட்டது. அம்மன் தேர்கள் 40 அடி உயரத்திற்கும் மேல் இருந்ததால் பாதுகாப்பு கருதி பாலாற்றின் 2 பாலங்களிலும், பஸ்நிலையம் பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பாலாற்றின் புதிய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், பழைய பாலத்தில் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனால் பழைய பாலம் மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் ஆற்காடு, ராணிப்பேட்டை, அரக்கோணம், திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் உள்பட மாவட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட இடங்களில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story