வேலூர் மாவட்டத்தில் 41,607 பேர் பிளஸ்–1 தேர்வு எழுதினர் தேர்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்


வேலூர் மாவட்டத்தில் 41,607 பேர் பிளஸ்–1 தேர்வு எழுதினர் தேர்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-06T19:25:31+05:30)

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 607 பேர் பிளஸ்–1 தேர்வு எழுதினர். தேர்வு நடைபெறுவதை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டார்.

வேலூர்,

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 371 மாணவர்கள், 3 ஆயிரத்து 761 தனித்தேர்வர்கள் என மொத்தம் 44 ஆயிரத்து 132 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு அறை, மையங்களை கண்காணிக்கும் பணியில் 220 தலைமை ஆசிரியர்களும், 1,600 முதுகலை ஆசிரியர்களும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களும், 250 பறக்கும்படை உறுப்பினர்களும் ஈடுபட்டனர்.

மாணவர்கள், தனித்தேர்வர்கள் காலை 9 மணியளவில் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் 9.30 மணியளவில் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. 10 மணிக்கு வினாத்தாள், விடைத்தாள் மாணவர்கள் கையில் கொடுக்கப்பட்டது.

முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை படிக்கவும், விடைத்தாளின் முதல்பக்கத்தை நிரப்பவும் ஒதுக்கப்பட்டது. 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 12.45 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 41 ஆயிரத்து 607 பேர் தேர்வு எழுதினர். 118 மாற்றுத்திறாளி மாணவர்களும் இதில் அடங்குவர். 2 ஆயிரத்து 525 பேர் தேர்வு எழுதவில்லை. அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவும், காப்பி அடிக்கிறார்களா? என தீவிரமாக பறக்கும் படையினர் கண்காணித்தனர்.

வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த பிளஸ்–1 தேர்வை கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேர்வர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. மயானக்கொள்ளை திருவிழா காரணமாக வேலூர் தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அப்பகுதியில் நடந்த தேர்வு மையங்களில் மின்சாரம் இல்லை.

ஜெனரேட்டர் வசதியும் செய்யப்படாததால் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story