27,434 மாணவ, மாணவிகள் பிளஸ்–1 தேர்வு எழுதினர் தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 434 மாணவ, மாணவிகள் பிளஸ்–1 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் பிளஸ்–1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, செங்கம் ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மேற்கண்ட 5 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் 13 ஆயிரத்து 240 மாணவர்களும், 14 ஆயிரத்து 558 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 798 பேர் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் தேர்வு தொடங்கியது. காலை முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் மைய வளாகத்தில் குழுவாக அமர்ந்து படித்தனர். இதனை தொடர்ந்து தேர்வு நேரம் தொடங்கியதும் அவர்கள் வகுப்பறைக்குள் சென்றனர்.
செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 112 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. முதல் நாளான தமிழ் தேர்வை 364 பேர் எழுதவில்லை. இதனால் விண்ணப்பித்த 27 ஆயிரத்து 798 பேரில் 27 ஆயிரத்து 434 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர்.
தேர்வை கண்காணிக்க 112 முதன்மை கண்காணிப்பாளர்களும், 112 துறை அலுவலர்களும், 180 பறக்கும் படையினரும், 1,677 அறைக்கண்காணிப்பாளர்களும், 112 அலுவலக பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு பணியை மேற்கொண்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், சு.வாழவெட்டியில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார். மேலும் பல்வேறு மையங்களுக்கு சென்று அவர் தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டார்.