கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தர்மபுரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு 249 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.87.25 லட்சம் மதிப்பில் திருமண நிதிஉதவி, 491 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, பழங்குடியினர் நலத்துறை சார்பில் தேனீவளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–
தமிழகத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர். இவர்களில் 6 லட்சம் பேர் பட்டதாரிகள். 4.53 லட்சம் பயனாளிகள் 10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்தவர்கள். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலும், திருமண நிதியுதவி திட்டத்திலும் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து உள்ளன.
தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தின் மூலம் இதுவரை 23,857 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வீதம் மொத்தம் 115 கிலோ கிராம் தங்கமும், திருமண நிதியுதவியாக ரூ.81.21 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது. பயனாளிகளில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் 8,628 பேர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2017–2018–ம் ஆண்டில் மொத்தம் 2,097 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மானிய விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. 2019–2020–ம் நிதி ஆண்டில் இந்த திட்டத்தில் வேலைக்கு செல்லும் 2097 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக அரசின் சார்பில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.12 ஆயிரம் நிதியுதவி தற்போது ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த அரசுக்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் இந்தியா, பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், ஆறுமுகம், முன்னாள் நகராட்சி உறுப்பினர் பூக்கடை ரவி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.