சேலம் மாவட்டத்தில் பிளஸ்–1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது 37,477 மாணவ–மாணவிகள் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் நேற்று பிளஸ்–1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 37 ஆயிரத்து 477 மாணவ–மாணவிகள் எழுதினர்.
சேலம்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வு மாணவ–மாணவிகளுக்கு நடத்துவதுபோல, பிளஸ்–1 மாணவ–மாணவிகளுக்கும் கடந்த ஆண்டு முதல்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு நேற்று முதல் பிளஸ்–1 பொதுத்தேர்வு தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 18 ஆயிரத்து 531 பேரும், மாணவிகள் 21 ஆயிரம் பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 531 மாணவ–மாணவிகள் பிளஸ்–1 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழ் முதல் தாள் தேர்வினை மொத்தம் 37,477 மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் மாணவர்கள் 17,302 பேர், மாணவிகள் 20,175 பேர் ஆவர். ஆனால் 2 ஆயிரத்து 54 மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் பிளஸ்–1 தேர்வுக்காக 120–க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடந்தது.
பிளஸ்–1 தேர்வையொட்டி 100–க்கும் மேற்பட்ட முதன்மை கண்காணிப்பாளர்களும், அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் மாணவ–மாணவிகள் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படையும் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினர்.
தேர்வு தொடங்கும் முன்னதாக மாணவ–மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு மட்டுமல்லாது, பள்ளி வளாகத்தில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். சில பள்ளிகளில் மாணவ–மாணவிகள் தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளும் வகையில் தியானத்திலும் சிறிது நேரம் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் மாணவ–மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்களும் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.