கொடைக்கானல் அருகே, 10 தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
கொடைக்கானல் நகரை தொடர்ந்து வில்பட்டி ஊராட்சியில் 10 தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உரிய அனுமதி இன்றியும் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 45 கட்டிங்களையும், 2-வது கட்டமாக 1,415 கட்டிடங்களையும் பூட்டி ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள் உள்பட 6 இனங் களை தவிர்த்து தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு மட்டும் ‘சீல்’ வைக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நேற்று முன்தினம் வரை 230 தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கொடைக்கானலை அடுத்துள்ள வில்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அங்கு உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பட்டுராஜன், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வில்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அதில் முதல் கட்டமாக 405 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வம், மதுரைவீரன், சுந்தரவடிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ மற்றும் அதிகாரிகளின் துணையுடன் வில்பட்டி ஊராட்சியில் உள்ள எம்.எம்.தெரு, குறிஞ்சி ஆண்டவர் கோவில் ரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையை தொடங்கினர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் அனுமதியின்றி கட்டப்பபட்ட 10 தங்கும் விடுதிகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் 65 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணிகள் நடைபெறும் என்றும், மேலும் கணக்கெடுப்பு நடத்தி அனுமதியற்ற கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story