டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்


டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்முதல் நிலைய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாஞ்சிக்கோட்டை,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் திறக்கப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் அடுக்கி வைத்து வருகின்றனர்.

பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் நிரந்தர கட்டிடம் இல்லாததால் கூரைகளால் ஆன இடங்களை வாடகைக்கு எடுத்து அங்கு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வீசிய கஜா புயலால் நிரந்தர கட்டிடங்களில் செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்களின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விட்டது.

இதனால் மேற்கூரை இல்லாமல் கட்டிடம் மட்டும் உள்ளது. பல இடங்களில் கட்டிட வசதி இல்லாததால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர்.

வெட்ட வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் மழையில் நனைந்தும், வெயில் காலத்தில் கொளுத்தும் வெயிலில் காய்ந்தும் நெல் மூட்டைகள் வீணாகி வருகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 5 ஆயிரம் மூட்டைகள் முதல் 10 ஆயிரம் மூட்டைகள் வரையில் தேங்கி கிடக்கிறது.

எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை உடனுக்குடன் லாரிகள் மூலம் எடுத்துச்செல்ல நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்முதல் நிலைய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story