பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளஸ்- 1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 68 மையங்களில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் 168 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 19,260 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 18,853 பேர் தமிழ் தேர்வை எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 407 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை.

இதேபோல் பிளஸ்-1 பழைய பாட திட்டத்தில் படித்தவர்களில் 1,077 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 363 பேர் தமிழ் மொழிப்பாட தேர்வை எழுதினார்கள். 714 பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை. பிளஸ்-1 தமிழ் மொழிப்பாட தேர்வை மொத்தம் 19,216 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். மொத்தம் 1,121 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்விற்காக 68 முதன்மை கண்காணிப்பாளர்கள், 72 துறை அலுவலர்கள், 150 பறக்கும் படை அலுவலர்கள், 1,398 அறை கண்காணிப்பாளர்கள் உள்பட மொத்தம் 1,694 பேர் நியமிக்கப்பட்டு தேர்வு பணியில் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் அவசர உதவிக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட பறக்கும் படை குழுவும், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் கல்வித்துறை மூலம் பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள் என மொத்தம் 187 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுதினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் மத்தூர் என 4 கல்வி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69 மையங்களில் 10 ஆயிரத்து 8 மாணவர்களும், 10 ஆயிரத்து 831 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 839 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் அறை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், பறக்கும்படையினர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.


Next Story