தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தலில் எஸ்.ஆர்.வெற்றிவேல் வெற்றி துணைத்தலைவராக எம்.கே.வேலுமணி தேர்வு
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவிக்கான தேர்தலில் எஸ்.ஆர்.வெற்றிவேல் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக எம்.கே.வேலுமணி தேர்வு செய்யப்பட்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் தர்மபுரியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 21 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் வங்கியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று தர்மபுரியில் உள்ள வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் திருமாவளவன் இந்த தேர்தலை முன்னின்று நடத்தினார்.
தலைவர் பதவிக்கு போட்டியிட தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கிருஷ்ணகிரி மாவட்டம் மலையாண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட பாப்பாரப்பட்டி சிவா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் எம்.கே.வேலுமணி, ஜெகதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மாதையன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்குரிய நிர்வாகிகளை போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.பி., தர்மபுரி மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த வங்கி இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 10 இயக்குனர்களும் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்து விட்டு வங்கி தலைமை அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் முன்னிலையில் வங்கியின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 11 இயக்குனர்களும் வாக்களித்தனர். இந்த தேர்தலின் முடிவில் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.கே.வேலுமணி ஆகியோர் தலா 11 வாக்குகளை பெற்றனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக எஸ்.ஆர்.வெற்றிவேல், துணைத்தலைவராக எம்.கே.வேலுமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலர் சான்றிதழ்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வங்கியின் மேலாண்மை இயக்குனர் ரேணுகா முன்னிலையில் வங்கியின் தலைவராக எஸ்.ஆர்.வெற்றிவேலும், துணைத்தலைவராக எம்.கே.வேலுமணியும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு வங்கி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த தேர்தலையொட்டி வங்கி முன்பு தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Related Tags :
Next Story