தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய உணவு நிறுவனங்களுக்கு ரூ.5.95 லட்சம் அபராதம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய உணவு நிறுவனங்களுக்கு ரூ.5.95 லட்சம் அபராதம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 6 March 2019 7:33 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய உணவு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேக்கரிகள், ஓட்டல்கள், டீக்கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உணவு விடுதிகள், கேண்டீன்கள் மற்றும் இதர இடங்களில் காரங்கள், இனிப்பு பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய் சுத்தமானதாக இருக்க வேண்டும். உணவு நிறுவனங்கள் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும், உணவு வணிகர்கள் சமையல் எண்ணெய் நாள் ஒன்றுக்கு 50 லிட்டருக்கு மேல் உபயோகம் செய்தால் அவர்கள் எண்ணெயை அப்புறப்படுத்திய விவர பதிவேடு பராமரிக்க வேண்டும். எந்தெந்த எண்ணெய் எவ்வளவு அளவு பயன்படுத்தப்பட்டது. அவை எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது, அல்லது மறு சுழற்சி செய்யப்பட்டது என்ற விவரத்தை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் உபயோகிக்ககூடாது. அவ்வாறு பயன்படுத்துவதால் மனித உடலுக்கு புற்றுநோய் மற்றும் பல உடல் உபாதை உண்டாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். உபயோகம் செய்த எண்ணெயை அப்புறப்படுத்திவிட்டோம் மீண்டும் உபயோகப்படுத்தவில்லை என்று முறையாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 146 எண்ணெய் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில் 82 தரமானது என்றும், தரம்குறைவானது, பாதுகாப்பற்றது என்று 64 ஆய்வறிக்கையும் வரப்பெற்று உள்ளது. அதன் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு தரமற்ற எண்ணெயை பயன்படுத்திய உணவு நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் சம்பந்தமாக 94440-42322 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story