ஊட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊட்டி ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மொராடாகம்பை பகுதியில் முதல்-அமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.1.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் அம்பேத்கர் காலனி பகுதியில் முடிக்கப்பட்ட சாலை பணி, வீடுகள் பழுது பார்க்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27.3 லட்சம் மதிப்பில் எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பேரகல் பகுதியில் முடிக்கப்பட்ட சாலை பணி, இடுஹட்டியில் ரூ.3 லட்சம் செலவில் நடைபெற்று வரும் நீழ் குழி அமைக்கும் பணி, ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெல்மனஹாடா முதல் கனாகம்பை வரை ரூ.63 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்படுத்தப்பட்ட சாலை பணி, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21.4 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட கோழிப்பண்ணை அமைக்கும் பணி, ரூ.2.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு உரம் தயாரிக்கும் கூடம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18.2 லட்சம் செலவில் கக்குச்சி முதல் கனாகம்பை வரை முடிக்கப்பட்ட சாலை பணி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் கூக்கல் ஊராட்சியில் நடைபெற்று வரும் ரேஷன் கடை கட்டும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி பொறியாளர் செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story