கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 6 பேர் காயம்


கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 6 பேர் காயம்
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் கோவில் நுழைவு வாயில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர்.

பெ.நா.பாளையம், 

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாலமலை அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த மாதம் தான் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையடுத்து மலையின் அடிவாரத்தில் கோவிலுக்கு புதிதாக நுழைவு வாயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நுழைவு வாயிலில் மேல்பகுதியில் சாரம் அமைத்து நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது.

பணியின் போது சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 55), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த குமார் (35), செல்வராஜ் (42), கோவனூரை சேர்ந்த ராஜேஸ்வரி (35), ஜெயமணி (55), குருந்தம்மாள் (60) ஆகிய 6 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாரம் தாங்காமல் சாரம் சரிந்து விழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story