ஆத்தூரில், மணல் திருட்டை தடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் சாலைமறியல் 20 பேர் கைது
ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் திருட்டை தடுக்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் வசிஷ்ட நதி ஆற்றில் பெருமளவு மணல் திருட்டு நடைபெறுவதாகவும், இதனை உடனடியாக தடுக்கக்கோரியும், திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தின் சார்பில் ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட கவுரவத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது விவசாய சங்கத்தினர், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் 20 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் நகராட்சி அண்ணா கலையரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story