பட்டாபிராமில் ரூ.230 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைவிடம் தொடக்க விழா
பட்டாபிராமில் ரூ.230 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க உள்ள அமைவிட தொடக்க விழா நடைபெற்றது.
ஆவடி,
ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல். நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் மூடப்பட்ட பிறகு, அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி புதர் மண்டி கிடந்தது.
பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில்கொண்டு அந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா(டைடல் பார்க்) அமைக்க வேண்டும் என அமைச்சரும், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாண்டியராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து மொத்தமுள்ள 38.4 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கரில் முதல் கட்டமாக 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவிட அரசு தீர்மானித்தது. அந்த நிலத்தை டைடல் பார்க் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யும் அரசாணைக்கும் ஒப்புதல் அளித்தது.
அதன்படி முதல் கட்டமாக பட்டாபிராமில் 5 லட்சம் சதுர அடியில் ரூ.230 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படுகிறது. இந்த திட்டத்துக்கான அமைவிட தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாண்டியராஜன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை சிறப்பு செயலாளர் அருண்ராய், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் உள்பட அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தினால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதற்கான கட்டுமான பணிகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் எனவும், இந்த திட்டம் இன்னும் 30 மாதங்களில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிகிறது.