சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் ரோகிணி தகவல்


சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 7 March 2019 3:30 AM IST (Updated: 7 March 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

சேலம், 

இது குறித்து கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையமும் சேர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.

கோமாரி நோய் இரட்டைக்குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது.

கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால்உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர்க்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.

இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை மாநிலத்தில் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு அந்தந்த ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தக பகுதிகளில் 150 குழுக்கள் மூலம் முன் கூட்டியே தக்க விழிப்புணர்வு செய்து 16-வது சுற்று கோமாரி தடுப்பூசி பணி நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story