கொத்தமங்கலத்தில் 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் குடிநீர் இல்லை பொதுமக்கள் புலம்பல்


கொத்தமங்கலத்தில் 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் குடிநீர் இல்லை பொதுமக்கள் புலம்பல்
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் குடிநீருக்காக 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக தற்போதைய ஆய்வுகள் கூறி வருகிறது. இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், மறமடக்கி, வடகாடு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கும் 1000 முதல் ஆயிரத்து 100 அடி வரை ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொத்தமங்கலம் கிழக்கு சங்கரன் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் தனி ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு மத்திய அரசு நிதியில் இருந்து ஆழ்குழாயும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பல்வேறு நிலத்தடி நீர் சோதனைகளுக்கு பிறகு கொத்தமங்கலம் சங்கரன் குடியிருப்பு பகுதியில் மத்திய அரசு நிதியில் இருந்து ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கியது. 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வேதனையில் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொத்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் மூலம் தான் விவசாயம் நடக்கிறது. தற்போது ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்குழாய் அமைத்தால் தான் தண்ணீர் என்ற நிலை உள்ளது. ஆனால் குடிதண்ணீருக்காக மத்திய அரசு சார்பில், வல்லுனர்களை கொண்டு நீர் ஊற்று பார்த்த பிறகு ஆழ்குழாய் அமைக்கப்பட்டதில் தண்ணீர் வரவில்லை.

தற்போது குடிதண்ணீருக்காக அமைத்துள்ள கிணற்றில் துவாரம் உள்ள குழாய்கள் அமைக்கப்படவில்லை. சரளை கற்களுக்கு பதில் மண் கொட்டி மூடியதால் தண்ணீர் ஊற்றும் அடைக்கப் பட்டுவிட்டது. அதனால் தான் தண்ணீர் வரவில்லை. மேலும் குஜராத் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த மத்திய அரசு திட்டமாக இருப்பதால் இது ஓ.என்.ஜி.சி.க்கு மறைமுகமாக நடத்தப்பட்ட சோதனையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என்றனர். ஆனால் திருநாளூர் வடக்கு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் மாற்று ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலங்கடத்தினால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளோம் என்றனர். 

Next Story