தேர்தலுக்காக அதிகாரிகள் இடமாற்றம் எதிரொலி, வருவாய்த்துறையினர் போராட்டத்தால் சான்றிதழ்கள் வழங்கும் பணி தேக்கம்


தேர்தலுக்காக அதிகாரிகள் இடமாற்றம் எதிரொலி, வருவாய்த்துறையினர் போராட்டத்தால் சான்றிதழ்கள் வழங்கும் பணி தேக்கம்
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 6 March 2019 8:24 PM GMT)

தேர்தலுக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் நடத்தும் உள்ளிருப்பு போராட்டத்தால் சான்றிதழ்கள் வழங்கும் பணி தேக்கம் அடைந்துள்ளது.

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. பொதுவாக தேர்தல் என்றாலே அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதில் பெரும்பாலும் உயர் அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாற்றப்படுவார்கள். ஆனால், இந்த முறை போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் கள், இன்ஸ்பெக்டர்கள், துணை சூப்பிரண்டுகள் கூட பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் மாநிலம் முழுவதும் அதிரடியாக பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மதுரை, தேனி உள்பட பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கு வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பணியிட மாறுதல்களை ரத்து செய்து, சொந்த மாவட்டத்திலேயே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று வருவாய்த்துறையினர் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் பணி செய்யவில்லை.

அதேநேரம் ஊரக வளர்ச்சித்துறையினர் மாலையில் 1 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வழக்கமான பணிகள் பெரிதும் முடங்கின. ஊரக வளர்ச்சித்துறையை பொறுத்தவரை கழிப்பறைகள், வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மானியம் வழங்குதல், குடிநீர் திட்ட பணிகள் அனைத்தும் பாதிக் கப்பட்டன.

அதேபோல் வருவாய்த்துறை சார்பில் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி தேக்கம் அடைந்துள்ளது. மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பிய இளைஞர்கள் சாதி சான்றிதழ் களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வருமானம், இருப்பிட சான்றிதழ்களையும் வாங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தேர்தலுக் காக அதிகாரிகளை வெளிமாவட்டத்துக்கு மாற்றியதை கண்டித்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story