மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முடிவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் கடந்த 2 நாள்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் மேற்பார்வையாளர் குழுக்கூட்டம், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த கூட்டங்களில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என முக்கிய நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடி தற்போது பயந்துபோய் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை அவசர அவசரமாக வழங்கியுள்ளார்.
இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அழித்தனர். இதில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 300 பேர் இறந்ததாக கூறுகிறார். மத்திய மந்திரி அலுவாலியா 300 பேர் இறக்கவில்லை என்கிறார். இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. பா.ஜ.க.வினர் அரசியலுக்காக நாடகம் ஆடுகின்றனர். ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்தோம். ஆனால், பாகிஸ்தான் பிரச்சினையை வைத்து பிரதமர் மோடி அரசியல் செய்ய பார்த்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய வீரர் அபிநந்தனை விடுதலை செய்ததால் மோடியின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது.
மத்திய அரசு ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். மோடி தலைமையிலான பா.ஜ.க. படுதோல்வி அடையும். புதுவை காங்கிரஸ் வேட்பாளர் உத்தேசபட்டியல் இன்னும் அனுப்பப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்தவுடன் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராகவும் கவர்னர் கிரண்பெடி செயல்பட்டு வருகின்றார். புலவாமா தாக்குதலில் தீவிரவாதிகள் உயிரிழப்பு தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத்துறை மந்திரி இது தொடர்பான விளக்கம் அளிக்காமல் பா.ஜ.க. தலைவர் விளக்கம் அளிக்கிறார். புலவாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் கூறியே ஆக வேண்டும்.
2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் என்றவர் தற்போது செய்தியாளர்களை சந்திக்க மறுக்கின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.