ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் அடிக்கடி பழுதாகும் சாதனங்கள் பொதுமக்கள் கடும் அவதி


ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் அடிக்கடி பழுதாகும் சாதனங்கள் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 10:10 PM GMT)

ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் உள்ள சாதனங்கள் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தின் முதல் தளத்தில் கட்டணமின்றி ஆதார் பதிவு செய்து கொள்ளும் ஆதார் சேர்க்கை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதாரில் முகவரி மாற்றம், எழுத்து பிழை திருத்தம், செல்போன் எண் மாற்றம், பெயர் திருத்தம் போன்றவை இலவசமாக செய்து கொள்ளலாம்.

இந்த ஆதார் மையத்திற்கு ஊத்துக்குளி பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இதனால் இந்த மையத்தில் தினமும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவு உள்ளது.

ஆனால் இந்த மையத்தில் ஒரு ஊழியர் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க கால தாமதம் ஆகிறது. அது மட்டுமல்ல இந்த மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. மேலும் கணினி வசதி இல்லாததால் மடிக்கணினி கொண்டு பொதுமக்களின் விவரம் உள்ளீடு செய்யப்படுவதால் மிகவும் கால தாமதம் ஏற்படுகிறது.

கைக்குழந்தையுடன் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட வேண்டி உள்ளது. ஆதார் மையத்திற்கு காலையில் வரும் பொதுமக்கள் மாலை வரை காத்திருக்கிறார்கள். சில நேரம் நீண்ட நேரம் காத்து இருந்தும், அவர்களால் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பி செல்ல நேரிடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

இந்த ஆதார் மையத்தில் பொதுமக்களின் விரல் ரேகை மற்றும் கண் விழிகளை ஸ்கேன் செய்யும் கருவிகள், இணையதள இணைப்புகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் இந்த கருவிகள் அடிக்கடி செயலிழந்து விடுகிறது. கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் கருவிகள் முறையாக செயல்படாத காரணத்தினால் பயன் அடைய முடியாமல் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர்.

மேலும் தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் கைக்குழந்தையுடன் தினமும் வெயிலில் நடந்து வர வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதார் சேர்க்கை மையத்தில் உள்ள கருவிகளை பழுது நீக்கியும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பணிகளை விரைவாக முடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story