தாசில்தார்கள் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை


தாசில்தார்கள் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 7 March 2019 3:45 AM IST (Updated: 7 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

தாசில்தார்கள் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழரசன் கூறியதாவது:–

 நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையாக தாசில்தார்கள் அனைவரையும் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

உள்ளுர் மக்கள் பற்றியும், இடங்களையும் நன்கு அறிந்தவர்கள் வருவாய்த்துறை ஊழியர்கள். அதனால் தான் தேர்தல் பணிகள் வருவாய்த்துறையின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்கும் வகையில், தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் செய்துள்ளது.

இதனால் தேர்தல் பணிகள் சீர்குலையும். இதனை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் நிரந்தர பொறுப்பு தாசில்தார்கள் இல்லாததால், வருவாய்த்துறையின் சேவைகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தாசில்தார்கள் மாவட்ட மாறுதலால் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக தேர்தல் பணிகள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் தாசில்தார்களின் மாவட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story