‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகிறார் குமாரசாமி, பொம்மை முதல்-மந்திரி பிரதமர் மோடி கடும் தாக்கு


‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகிறார் குமாரசாமி, பொம்மை முதல்-மந்திரி பிரதமர் மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 7 March 2019 5:00 AM IST (Updated: 7 March 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகிறார் என்றும், அவர் ஒரு ‘பொம்மை’ முதல்-மந்திரி என்றும் கலபுரகியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது.

கதவை அடைத்துள்ளேன்

இதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கலபுரகியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பேசியதாவது:-

கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு, விவசாயிகள் விரோத அரசு ஆகும். டெல்லியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், இங்குள்ள கூட்டணி அரசு பொறாமைப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் ‘கமிஷன்’ அடித்தவர் களுக்கு கதவை அடைத்துள்ளேன்.

வளர்ச்சி தேவை இல்லை

அதனால் சிலர் எனக்கு எதிராக பேசுகிறார்கள். ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒன்றாகி இருக்கின்றன. இவர்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சி தேவை இல்லை.

ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த கட்சிகள் ஒன்றுபட்டு அரசை நடத்துகின்றன. ஒருவர் அங்கு இழுத்தால், இன்னொருவர் இங்கே இழுக்கிறார். இந்த அரசுக்கு நமக்கு வேண்டுமா?. முதல்-மந்திரி குமாரசாமி ‘ரிமோட் கன்ட்ரோல்’படி செயல்படுகிறார். அவர் ஒரு பொம்மை முதல்-மந்திரி. அவரை காங்கிரஸ் இயக்குகிறது.

ஊழலை அனுமதிக்கமாட்டேன்

எது எப்படியோ, அரசை நடத்திக்கொண்டு சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். கர்நாடக மக்கள், இவர்களின் அரசியல் கருத்து வேறுபாடுகளை கண்டு வெறுப்படைந்துள்ளனர். நான் இருக்கும்வரை ஊழலை அனுமதிக்க மாட்டேன்.

நான் மீண்டும் பிரதமராக ஆகக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் சுயநலத்துடன் ஒன்று சேர்ந்துள்ளன. திருடர்களின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால், மக்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

கர்நாடகத்தில் மோசமான அரசு

நாங்கள் வறுமை, பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். ஆனால் என்னை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் எவ்வளவு மோசமான அரசு நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

அதனால் மீண்டும் நீங்கள் தவறு செய்ய வேண்டாம். மோடி இருந்தால், நமது ஆட்டம் நடக்காது என்று கருதி எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இது சந்தர்ப்பவாதிகளின் கூட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் பேசும் பேச்சை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மாநில அரசுகள் கோபம்

குழந்தை பிறக்கும் முன்பே, அவர்களின் பெயரில் மாணவர்கள் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இடைத்தரகர்களுக்கு சென்றது. இவ்வாறு 8 கோடி போலி பயனாளிகளை அடையாளம் கண்டு நீக்கியுள்ளோம். இந்த பயனை அடைந்தவர்கள், என்னை விரும்புவார்களா?. அவர்கள் என்னை திட்டமாட்டார்களா?. இதற்கு நான் பயப்பட வேண்டுமா?.

நீங்கள் எனக்கு ஆதரவாக இருக்கும்போது, நான் எதற்காக பயப்பட வேண்டும். ஒருவருக்கு 125 கோடி மக்களின் ஆதரவு இருக்கும்போது, அவர் பயப்படவே மாட்டார். முந்தைய ஆட்சி காலங்களில் இவ்வாறு முறைகேடுகள் செய்யப்பட்டன. அதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மத்திய அரசு, இன்று ஒவ்வொரு ரூபாயுக்கும் கணக்கு கேட்கிறது. இதனால் மாநில அரசுகள் கோபப்படுகின்றன. விவசாயிகளுக்கு உதவ ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் கர்நாடகத்தில் 71 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்த பயனை பெறுவதில் உள்ள தடுப்பு சுவரை கர்நாடக விவசாயிகள் இடித்து தள்ளுவார்கள்.

வாழ்வாதாரம் மேம்படும்

இந்த திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். மத்திய அரசில் முன்பு இடைத்தரகர்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்டன. நாங்கள் அதற்கு கடிவாளம் போட்டுள்ளோம்.

கர்நாடகம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால், இங்குள்ள கூட்டணி அரசை தூக்கி எறிய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம்.

முழு பெரும்பான்மையுடன்...

சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளித்துள்ளோம். தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம். ரெயில்வே, விமானத்துறை தொடர்பான தி்ட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்தியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு பெரும்பான்மையுடன் பலமிக்க அரசு எனது தலைமையில் அமைந்தது.

இதனால் அனைத்து பணிகளையும் நிறைவு செய்தோம். ஒருவேளை பலம் இல்லாத அரசு அமைந்திருந்தால், பணிகள் அனைத்தும் பாதியிலேயே முடியாமல் நின்றிருக்கும். நான் பலமான ஆட்சியை நடத்தியது தான் எதிர்க்கட்சிகளுக்கு கவலை அளிக்கிறது. நீங்கள் கொடுத்த பலத்தால் தான், இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இது என் பலத்தால் அல்ல, உங்கள் பலத்தால் நடந்தது. எனவே மீண்டும் முழு பெரும்பான்மை கொண்ட அரசை தேர்ந்தெடுக்க கர்நாடக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

கவர்னர் வஜூபாய் வாலா

இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கல்லூரி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் கவா்னர் வஜூபாய்வாலா, மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கலபுரகியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனி விமானம் மூலம் பீதருக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள விமானப்படை தளத்தில் வந்து இறங்கினார். அவரை கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் கலபுரகிற்கு வந்தார். அரசு விழா மற்றும் ெபாதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் ஹெலிகாப்டரில் பீதருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story