ராமநாதபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு புதிய அரசு பஸ்கள் மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்


ராமநாதபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு புதிய அரசு பஸ்கள் மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2019 3:52 AM IST (Updated: 7 March 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு புதிய அரசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 500 புதிய அரசு பஸ்களை தொடங்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 22 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 13 பஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்களை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல ராமநாதபுரம் நகர் கிளையின் மூலம் தெற்குத்தரவை வரை செல்லும் பஸ்(வழித்தட எண்–17) பள்ளி மாணவர்களின் வசதிக்காக வள்ளிமாடன்வலசை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த பஸ்களில் ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம் ராமேசுவரம்–சிதம்பரம் வழித்தடத்தில் ஒரு பஸ்சும், ராமேசுவரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும், ராமேசுவரம்–பழனி வழித்தடத்தில் ஒரு பஸ்சும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் ராமநாதபுரம்–மதுரை வழித்தடத்தில் 3 பஸ்களும், பரமக்குடி–தஞ்சாவூர் வழித்தடத்தில் 2 பஸ்களும், கமுதி–திருச்சி வழித்தடத்தில் 2 பஸ்களும், முதுகுளத்தூர்–மதுரை வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் முதல்கட்டமாக 35 புதிய பஸ்களும், இரண்டாம் கட்டமாக 12 புதிய பஸ்களும், மூன்றாம் கட்டமாக 11 புதிய பஸ்களும், நான்காம் கட்டமாக 9 புதிய பஸ்களும், தற்போது புதிய பஸ்களும் என 5 கட்டங்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக ராமநாதபுரம் கோட்ட மேலாளர் சரவணன், முன்னாள் ராம்கோ கூட்டுறவு தலைவர் முருகேசன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், பாலமுருகன், ரவி உள்பட அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.


Next Story