தூத்துக்குடியில், வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கிய 200 கிலோ கடல் அட்டை பறிமுதல் - 2 பேர் கைது
தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் கடத்தப்படுகிறதா? என்று கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் கடத்தல் கும்பல் தொடர்ச்சியாக கடல் அட்டையை கடத்தி வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி கோயில்பிள்ளை விளை பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், கிட்டங்கியில் இருந்த லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சதாசிவம்(வயது 28), திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(42) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டை மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சதாசிவம், அந்தோணிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story