கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே ரூ.4 கோடியில் பெண்ணையாற்று தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது


கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே ரூ.4 கோடியில் பெண்ணையாற்று தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே ரூ.4 கோடியில் பெண்ணையாற்று தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.

கடலூர்,

கடலூர் செம்மண்டலத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே பெண்ணையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் அக்கரையில் புதுச்சேரி மாநிலம் உள்ளதால், அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடலூருக்கு வருவதற்கு ஏதுவாக புதுச்சேரி அரசு பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கட்டியுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதாலும், கடல் நீர் ஊடுருவுவது தடுக்கப்பட்டதாலும், பெண்ணையாற்றின் இருகரையிலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு, நீரின் உப்புத்தன்மையும் மாறி விட்டது.

இந்த நிலையில் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, புதுச்சேரியையொட்டியுள்ள பகுதியில் தரைப்பாலம் உடைந்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கின்போது, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் தரைப்பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க 4 கோடியே 12 லட்சம் ரூபாயை புதுச்சேரி அரசு ஒதுக்கி உள்ளது. இந்த பணி தொடங்கியது. இந்த நிதியில் தரைப்பாலம் சீரமைப்படுவதோடு, தரைப்பாலத்தின் உயரம் மேலும் அரை அடி உயர்த்தப்பட உள்ளது. அதோடு மழைகாலங்களில் தரைப்பாலம் சேதமடையாமல் இருப்பதற்காக தரைப்பாலத்தின் இருபுறமும் ஆற்றுக்குள் தலா 4 ஆயிரம் கான்கிரீட் கட்டைகளை கொட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், பெண்ணையாற்றில் மண் கொட்டி தற்காலிகமாக மண் பாலம் அமைக்கும் பணியில் புதுச்சேரி பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அங்கு படகு குழாம் அமைக்கலாமா? என்று புதுச்சேரி அரசு பரிசீலித்து வருகிறது. அங்கு படகு குழாம் அமைத்தால் கடலூர் நகர மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு அம்சமாக அமையும்.

மேலும் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக கடல் நீர் ஊடுருவுவதை தடுக்க புதுச்சேரி பொதுப்பணித்துறையினர் பழைய பாலத்தின் அடியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அதில் நிரந்தரமாக கான் கிரீட் கட்டைகள் அடுக்கினால் கடல் நீர் உட்புகுவதை தடுக்க முடியும். இதற்கு தமிழக பொதுப்பணித்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரைப்பாலம் பகுதிக்கும், பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கழிவுநீர் கலப்பதால், ஆறு மாசுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story