சிதம்பரத்தில், ஜாமீனில் வந்தவரை கொலை செய்ய முயற்சி - 3 பேர் கைது


சிதம்பரத்தில், ஜாமீனில் வந்தவரை கொலை செய்ய முயற்சி - 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2019 4:00 AM IST (Updated: 7 March 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் ஜாமீனில் வந்தவரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் எம்.எம்.நாடார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் விஜயகுமார்(வயது 24). இவருடைய அண்ணன் வினோத்தை அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ்(32), சவுரிராஜன் மகன் சதீஷ்குமார்(30), சுப்பிரமணியன் மகன் கார்த்திக்(27) ஆகிய 3 பேர் கொலை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக விஜயகுமாருக்கும், சுரேஷ் உள்ளிட்ட 3 பேருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்வதற்காக விஜயகுமார் ஆயுதங்களுடன் தில்லைகாளியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். இது பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்தார். தனது வீட்டின் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ், சதீஷ்குமார், கார்த்திக் ஆகியோர் விஜயகுமாரை வழிமறித்து போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து விஜயகுமார் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், சதீஷ்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story