புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக ரெயிலில் காலியாக உள்ள இருக்கைகளை தெரிந்து கொள்ளும் வசதி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வெளியிடுகிறது
ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக காலியாக உள்ள இருக்கைகளை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதியை ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
மதுரை,
ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பெயர் மற்றும் இருக்கை எண் ஆகியவை குறித்த விவரம் அட்டவணையாக டிக்கெட் பரிசோதகர்களிடம் கொடுக்கப்படும். அதனை சரிபார்க்கும் பணியை ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அட்டவணையில், பகுதி இருக்கை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை(ஆர்.ஏ.சி.), காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் விவரங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.
ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் 4 மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால், பெரும்பாலான பயணிகளுக்கு திட்டமிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாது. அதேபோல, திடீரென அவசர வேலை காரணமாக ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம். அப்போது, முன்பதிவு செய்தால் இருக்கை கிடைப்பது அரிது.
இதற்காக ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகளின் பெயர் அட்டவணை வெளியிடப்படும். ஒரு சில ரெயில்களுக்கு மட்டும் ரெயில் புறப்படும் நேரத்தில் மட்டும் காலி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்பதிவு செய்யப்படும். ஒரு சிலர் பயணத்தை ரத்து செய்தாலும், முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ய முடியாத சூழல் ஏற்படுவதுண்டு.
அந்த காலி இருக்கைகளை பகுதியாக இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். அதன்பின்னரும், காலி இருக்கைகள் இருப்பின், காத்திருப்போர் பட்டியலில் உள்ள அட்டவணையில் இடம் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இதில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த அட்டவணையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. தனது irctc.co.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
இதில், முதல் அட்டவணை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாகவும், 2–வது காலி இருக்கைகள் அட்டவணை ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவும் இணையதளத்தில் வெளியிடப்படும். இணையதளம் மட்டுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி.யின் செல்போன் செயலி மூலமும் தெரிந்து கொள்ள முடியும்.
காலி இருக்கைகளை பொறுத்து, பயணிகள் குறிப்பிட்ட ரெயிலின் குறிப்பிட்ட வகுப்பு பெட்டியில் உள்ள டிக்கெட் பரிசோதகரை அணுகி உரிய கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அனைத்து வகுப்பு ரெயில் பெட்டிகளில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த நிலவரங்கள் வெளியிடப்படும். குறிப்பிட்ட வகுப்பில் உடனடியாக ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம். ரெயில்வேயின் இந்த புதிய திட்டத்துக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.