டெல்லியில் தேவேகவுடா-ராகுல்காந்தி பேச்சுவார்த்தை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் தேவேகவுடாவை ராகுல்காந்தி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினார். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் தேவேகவுடாவை ராகுல்காந்தி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினார். ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.
நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றுபட்டு எதிர்கொள்வது என்று அக்கட்சிகள் அப்போதே முடிவு செய்து அறிவித்தன. அதன்படி தற்போது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அக்கட்சிகளின் கர்நாடக தலைவர்கள் இடையே 2 முறை நடைபெற்றது.
12 தொகுதிகள் வேண்டும்
இதில் கலந்துகொண்ட ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள், தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொகுதிகளின் பட்டியலையும் அக்கட்சி வழங்கியது. அதில் சில தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 12 தொகுதிகளை வழங்க இயலாது என்று காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும் காங்கிரஸ் வசம் உள்ள தொகுதிகளையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தீர்வு ஏற்படவில்லை
கர்நாடக அளவில் இருகட்சி தலைவர்கள் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து டெல்லி அளவில் இருகட்சிகளின் தலைவர்களும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவருமான தேவேகவுடாவை அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராகுல்காந்தி உடன்படவில்லை
அப்போது, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ேக.சி.வேணுகோபால், ஜனதாதளம்(எஸ்) பொதுச் செயலாளர் டேனிஷ்அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 12 தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடா வலியுறுத்தினார். இதற்கு ராகுல்காந்தி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதிகபட்சமாக 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று தேவேகவுடா கூறியதாக சொல்லப்படுகிறது.
இறுதி முடிவு
இதுகுறித்து கர்நாடகத்தில் உள்ள தங்கள் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு சொல்வதாக ராகுல்காந்தி கூறினார். இதனால் இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இரு கட்சி தலைவர்களும் மீண்டும் ஒரு முறை கூடி பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தொகுதி பங்கீடு குறித்து ராகுல்காந்தி என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்பு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நான் கோரினேன். இப்போது ராகுல் காந்தியிடம், 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். இந்த விஷயத்தில் இறுதி முடிவை ராகுல்காந்தி எடுப்பார்.
ராகுல்காந்தி அனுமதி
வருகிற 10-ந் தேதிக்குள் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும். இன்றைய (நேற்று) கூட்டத்தில் சில அம்சங்கள் குறித்து விவாதிக்கவில்லை. அதை கே.சி.வேணுகோபாலும், நானும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க ராகுல்காந்தி அனுமதி வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் விவாதித்தோம். மூன்றில் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story