கடனாநதி அணை நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது ஆழ்வார்குறிச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கடனாநதி அணையின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. இதனால் ஆழ்வார்குறிச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கடையம்,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடிக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே உள்ள கடனாநதி அணையின் மொத்த கொள்ளளவு 85 அடியாகும். அந்த பகுதியில் கடுமையான வெயிலால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 42.78 அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. அணையின் கசிவு நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை முழுவதுமாக வறண்டு விட்டது. அணையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. இதனால் ஆறுகளும், கால்வாய்களும் வறண்டன. இதனால் கடையம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் தண்ணீர் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து நேற்று 49.85 அடியாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பாபநாசம், மணிமுத்தாறு அணையின் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story