நெல்லை அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் சிக்கியது, நகர ஊரமைப்பு துறை துணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
நெல்லை அலுவலகத்தில் ரூ.1½ லட்சம் சிக்கியது தொடர்பாக நகர ஊரமைப்பு துறை துணை இயக்குனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நெல்லை,
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே நகர ஊரமைப்பு துறை மண்டல இயக்குனர் அலுவலகம் (உள்ளூர் திட்ட குழுமம்) அலுவலகம் உள்ளது. இங்கு மண்டல துணை இயக்குனராக நாகராஜனும், உதவி இயக்குனராக மாரியப்பனும் உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கட்டிட வரைபடத்துக்கான அனுமதியை இந்த அலுவலகத்தில் தான் பெற வேண்டும். இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை புரோக்கர்கள் லஞ்ச பணத்துடன் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சால்வன், துரை, சப்- இன்ஸ்பெக்டர்கள் இசக்கி பாண்டியன், மாரியப்பன் மற்றும் போலீசார் உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகத்துக்கு சென்றனர்.
அங்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 புரோக்கர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் பணம் இருந்தது. கணக்கில் வராத அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மண்டல இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் போலீசார் தொடர்ந்து சோதனை செய்தனர். அங்கு வந்த புரோக்கர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
நேற்று 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அங்கு வைத்து இருந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மண்டல துணை இயக்குனர் நாகராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மண்டல துணை இயக்குனர் நாகராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். எங்களிடம் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து உள்ளோம். கிடைத்துள்ள ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைப்போம்” என்றார்.
Related Tags :
Next Story