நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் - நாஞ்சில் சம்பத் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் - நாஞ்சில் சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 6 March 2019 11:15 PM GMT (Updated: 6 March 2019 11:17 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி தி.மு.க. செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.சி.சண்முகையா, ஸ்பிக்நகர் பகுதி செயலாளர் பொன்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

உலகம் சுற்றும் மோடியையே தன் வீட்டின் முன்பு நிற்க வைத்தவர் ஜெயலலிதா. ஆனால் தற்போது உள்ளவர்கள் மோடிக்கு சேவகம் செய்து வருகின்றனர். தமிழகம் தனது பெருமையை இழந்து தவிக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை.

தேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்குள் தைரியமாக மோடி நுழைகிறார். மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளித்து விட்டு, தமிழகத்துக்குள் நுழையும் மோடியை தட்டிக் கேட்க இந்த ஆட்சியாளர்களுக்கு துணிவு இருக்கிறதா?.

அ.தி.மு.க., தலைமையில் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணி வைத்து உள்ளனர். இவர்கள் இந்தியாவை கூறு போட முடிவு செய்து உள்ளனர். இந்தக் கூட்டணி 40 தொகுதியிலும் தோல்வியை சந்திக்கும். நான் தி.மு.க.,வில் இடம் தேடி வரவில்லை. என் மீது எழும் விமர்சனம் குறித்து எனக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பூபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜெ.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story