ஒடுகத்தூரில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய பூமி பூஜை : அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சியானது 70–க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அணைக்கட்டு,
வேலூர்–ஒடுகத்தூர் இடையே அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதற்கு போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. நிழற்கூடமும் இல்லை.
இந்த நிலையில் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், நிழற்கூடம் மற்றும் வணிக வளாகம் கட்ட முதற்கட்டமாக ரூ.40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இங்கு பணிகளை தொடங்குவதற்காக நேற்று பூமி பூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. தருமலிங்கம் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் வேலழகன், அ.தி.மு.க.நகர செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பஸ் நிலைய விரிவாக்கம் செய்யவும், சிமெண்ட் தரைதளம், பயணிகள் நிழற்கூடம் மற்றும் வணிக வளாகம் ஆகியவை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஒடுகத்தூர் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறும்.
தொடர்ந்து பணிகள் நடைபெற போதுமான நிதியை ஒதுக்கி தரப்படும். மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். இந்த நிகழ்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் நிர்மலா மணிமாறன் கவுன்சிலர்கள் ஜெயசீலன், குமார் ஜெயபிரகாஷ் ஊராட்சி கழக செயலாளர் கண்ணன் பேரூராட்சி இளநிலை எழுத்தர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.