கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை மிரட்டல் வந்தவாசி அருகே பரபரப்பு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க. பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா பாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45), பாரதீய ஜனதா பிரமுகர். இவர் நேற்று காலை 10 மணியளவில் கீழ்கொடுங்காலூர் கூட்ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதை கண்ட பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். அப்போது ஜெய்சங்கர், தனது கையில் வைத்திருந்த 2 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை கீழே வீசினார்.
அந்த மனுவில், தொழிலாளர்கள் எந்த பணி புரிந்தாலும் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.350 ஊதியம் வழங்க வேண்டும். 8 மணிநேரம் மட்டுமே அவர்களை வேலை வாங்க வேண்டும். அதற்குமேல் அவர்கள் பணிபுரிந்தால் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வீரர்கள் கயிறு கட்டி அவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர் ஜெய்சங்கரை கீழ்கொடுங்காலூர் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story