பணி மாறுதல் ஆணை வந்தும் விடுவிக்கவில்லை: இன்ஸ்பெக்டரால் தற்கொலை செய்து கொள்வதாக போலீஸ்காரர் மிரட்டல் ‘வாட்ஸ்அப்’பில் பரவிய கடிதத்தால் பரபரப்பு
பணி மாறுதல் ஆணை வந்தும் விடுவிக்கவில்லை, இறந்த தனது தாயாரின் 41-வது நாள் சடங்கில் கலந்து கொள்ளவும் விடுமுறை தராததால் தனது சாவுக்கு இன்ஸ்பெக்டர்தான் காரணம் என போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து எழுதிய கடிதம் ‘வாட்ஸ்அப்’பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
நெல்லையை சேர்ந்தவர் பொன்லிங்கம். இவர், சென்னை ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர், ராயலாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டரால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதிய மிரட்டல் கடிதம் மற்றும் தனக்கு வந்த பணி மாறுதல் குறித்த ஆணை கடிதமும் நேற்று ‘வாட்ஸ்அப்’பில் வேகமாக பரவியது.
அந்த கடிதத்தில் போலீஸ்காரர் பொன்லிங்கம் கூறி இருப்பதாவது:-
நான், ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை போலீசாக வேலை செய்து வருகிறேன். இதுவரை 3 இன்ஸ்பெக்டர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் எங்களை முறையாக நடத்தினார்கள். ஆனால் தற்போதுள்ள இன்ஸ்பெக்டர், என்னை தரக்குறைவாக நடத்துகிறார்.
எனது தாய் உடல்நிலை சரியில்லாமல் உயிர் போகும் நிலையில் இருந்தபோது தாயை பார்த்துவிட்டு வருவதாக கூறி விடுமுறை கேட்டேன். ஆனால் உரிய நேரத்தில் விடுமுறை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வழங்கினார். ஆனால் அதற்குள் எனது தாயார் இறந்துவிட்டார்.
எனது தாயாரின் சாவுக்கு சரியான நேரத்தில் விடுமுறை கொடுக்காததற்கு இன்ஸ்பெக்டர்தான் காரணம். தாயாரின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்து மீண்டும் பணிக்கு வந்த நான், நெல்லை மாவட்டத்துக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்தேன். அதுவும் கிடைத்துவிட்டது.
ஆனால் பணி மாறுதல் ஆணை வந்தும் அந்த இன்ஸ்பெக்டர் என்னை இங்கிருந்து விடுவிக்காமல் இருந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட இருந்தேன். ஆனால் அவர்களை சந்திக்க முடியவில்லை.
மேலும் எனது தாயாரின் 41-வது நாள் சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு செல்வதற்கும் விடுமுறை கொடுக்கவில்லை. பணி மாறுதலில் செல்லவும் விடாததால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். எனது சாவுக்கு முக்கிய காரணம், ராயலா நகர் இன்ஸ்பெக்டர்தான்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கடிதம் போலீஸ் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து உடனடியாக போலீஸ்காரர் பொன்லிங்கத்தை அழைத்து பேசி, ராயலா நகர் போலீஸ் நிலைய பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு விடுமுறை அளிக்காமலும், பணி மாறுதலுக்கு அனுப்பாமலும் இருந்ததற்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக போலீஸ்காரர் ஒருவர் எழுதிய தற்கொலை மிரட்டல் கடிதம் ‘வாட்ஸ் அப்’பில் வேகமாக பரவியது.
அந்த கடிதத்துடன், நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்கு செல்லும்போது குரோம்பேட்டையில் ரெயில் மோதி பலியான திருலோகசந்தர் என்ற போலீஸ்காரர் இறந்து கிடந்த படமும் இணைந்து பரவியதால், போலீஸ்காரர்தான் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story