ஒப்பந்தப்படி நடக்கவில்லை சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்காமல் ரூ.2½ கோடி மோசடி தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு


ஒப்பந்தப்படி நடக்கவில்லை சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்காமல் ரூ.2½ கோடி மோசடி தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-07T22:28:18+05:30)

சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், அரசு பணம் ரூ.2½ கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, 

சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் (திட்டமிடுதல்) சந்திரன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை நகரில் 40 முக்கியமான சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 29.1.2010 அன்று ‘லுக்மேன் எலக்ட்ரோ பிளாஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 12 வாரங்களில் 40 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திவிட வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு 3 வருடங்கள் பராமரிப்பு பணியையும் குறிப்பிட்ட நிறுவனமே செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 3 தவணைகளில் ரூ.2 கோடியே 69 லட்சத்து 80 ஆயிரத்து 740 தொகை கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்த தொகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் 92 சதவீதமாகும். ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட நிறுவனம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவில்லை. கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட நிறுவனம் கண்காணிப்பு கேமராக்களை அமைக்காமல் அரசு பணத்தை மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் மோசடி உள்பட 2 சட்டப்பிரிவின் கீழ் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி அன்று வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story