தர்மபுரியில் இருந்து 8 புதிய அரசு பஸ்கள் இயக்கம் கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் இருந்து 8 அரசு பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 8 புதிய புறநகர் பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி 8 வழித்தடங்களில் புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொதுமேலாளர் லாரன்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-
தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் 8 வழித்தடங்களில் புதிய புறநகர் அரசு பஸ்களை இயக்குகிறது. இதன்படி தர்மபுரியில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை 2 புதிய பஸ்களும், பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம், மொரப்பூர் வழியாக அரூர் வரை ஒரு புதிய பஸ்சும் இயக்கப்படுகின்றன.
இதேபோல் சேலத்தில் இருந்து தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக பெங்களூரு வரை 2 புதிய பஸ்களும், தர்மபுரியில் இருந்து பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூருவிற்கு 2 பஸ்களும், சேலத்தில் இருந்து தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை வழியாக ஒரு பஸ்சும் என மொத்தம் 8 வழித்தடங்களில் புதிய புறநகர் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு தினமும் சென்று வரும் மாணவ-மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் மலர்விழி புதிய அரசு பஸ்களில் ஒன்றில் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்கள் சிவமணி, ஜெயபால், மோகன்குமார், ராஜராஜன், கிளை மேலாளர்கள் சுப்பிரமணி, ஆசைலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம் உள்பட போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியாளர்கள், பயணிகள், திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story