கூடலூரில், விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் இடிப்பு


கூடலூரில், விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் இடிப்பு
x
தினத்தந்தி 7 March 2019 10:45 PM GMT (Updated: 7 March 2019 5:15 PM GMT)

கூடலூரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் அரசு நிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையொட்டி வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது கூடலூர் செம்பாலா, நந்தட்டி மற்றும் காளம்புழா பகுதியில் சில கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையொட்டி கூடலூரில் இருந்து ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் உள்ள காளம்புழா பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை கடந்த ஆண்டு வருவாய்த்துறையினர் இடிக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே கட்டிடத்தை இடிப்பதற்கு எதிராக கோர்ட்டில் கட்டிட உரிமையாளர் வழக்கு தொடுத்தார். இதனால் கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர் நந்தட்டி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கூடாரங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கூடலூர் காளம்புழா பகுதியில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் கூடலூர்- ஸ்ரீமதுரை சாலையை போலீசார் தற்காலிகமாக மூடினர். மேலும் வாகன போக்குவரத்து மற்றும் மின்சார வினியோகமும் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில் தாசில்தார் ஹாரி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் உள்பட அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் காலை 6 மணிக்கு வந்தனர்.

பின்னர் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடத்தின் முகப்பு பகுதி பொக்லைன் எந்திரங்கள் கொண்டு இடிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி ஊழியர்கள் கட்டிடத்தின் இதர பகுதிகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் 12 மணிக்கு இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, கோர்ட்டு உத்தரவின் பேரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. கட்டிட உரிமையாளர் தரப்பில் கேட்டபோது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கட்டிடங்களை அதிகாரிகள் இடித்துள்ளனர் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே மாலை 4 மணிக்கு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

பின்னர் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது சம்பந்தமாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளேன். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Next Story