போராட்டம் எதிரொலி: தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் இடமாறுதல் ரத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை


போராட்டம் எதிரொலி: தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் இடமாறுதல் ரத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-07T23:06:39+05:30)

போராட்டம் எதிரொலியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட இடமாறுதலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

சேலம், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேநேரத்தில், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் ஆகியோரை மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 24 தாசில்தார்கள் சேலம் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 13 தாசில்தார்கள், சேலத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 37 பேரும் மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக தாசில்தார்கள் மாவட்டத்திற்கு உள்ளே இடமாறுதல் செய்யப்பட்டு வந்தனர். ஆனால் முதன்முறையாக சேலத்தில் பணியாற்றி வரும் தாசில்தார்களை மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்வதை ஏற்க முடியாது என்றும், இதனால் இடமாற்றம் செய்த உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்தநிலையில், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட இடமாறுதல் உத்தரவை தற்போது தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதாவது, ஒரு மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 அல்லது 4 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளையும், சொந்த ஊரில் பணியாற்றி வரும் அதிகாரிகளையும் மாவட்டத்திற்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாநில அளவிலான அதிகாரிகளை மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு மாற்றிடலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களின் வேறு மாவட்டங் களுக்கான இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாசில்தார் ஒருவரிடம் கேட்டபோது, எங்களது நியாயமான கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை ரத்து செய்துவிட்டது. இதனால் ஏற்கனவே நாங்கள் பணிபுரியும் இடத்திலேயே நீடிக்கிறோம், என்றார்.

Next Story