உடுமலை அருகே, மரத்தில் சரக்கு வாகனம் மோதி கவிழ்ந்தது; 12 பேர் படுகாயம்
உடுமலை அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதி கவிழ்ந்ததில், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
குடிமங்கலம்,
உடுமலை பகுதியில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து தொழிலாளர்கள் வாகனங்களில் அழைத்து வரப்படுகிறார்கள். பின்னர் வேலை முடிந்ததும் அதே வாகனத்தில் ஊர்களுக்கு கொண்டு விடப்படுகிறார்கள்.
குடிமங்கலம் அருகே கொள்ளுப்பாளையத்தில் பீட்ரூட் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக உடுமலையை அடுத்த பழையூர், வாளவாடி, கிழுவன் காட்டுபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு வாகனம் ஒன்றில் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இந்த சரக்கு வாகனத்தை வேல்முருகன் (வயது 22) என்பவர் ஓட்டினார். இந்த சரக்கு வாகனம் கோட்டமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த வீராத்தாள் (65), முத்தம்மாள் (50), நாச்சம்மாள் (56), செல்வி (40), அன்னலட்சுமி (35), வீரம்மாள் (39), பழனியம்மாள் (65), ராஜாத்தி (36), காளஸ்வரி (35), மயிலாத்தாள் (42), குமுதம் (35) மற்றும் டிரைவர் வேல்முருகன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீராத்தாள் மற்றும் குமுதம் ஆகிய 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story