திருவாரூரில், பாதுகாப்பு மையத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 சிலைகள் போலியானவை


திருவாரூரில், பாதுகாப்பு மையத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 சிலைகள் போலியானவை
x
தினத்தந்தி 8 March 2019 4:45 AM IST (Updated: 8 March 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், பாதுகாப்பு மையத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 5 சிலைகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 4,539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகளின் பழமை, தொன்மை நிலை குறித்து அறிந்திட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறை உதவியுடன் 4 கட்டங்களாக ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 5-வது கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வினை தொடங்கினர். நேற்று தென் மண்டல தொல்லியல்துறை இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் துறை அலுவலர்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் நாகை மாவட்டம் திருக்குவளை உள்பட பல்வேறு கோவில்களின் சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது சிலைகளின் தன்மை, உயரம், எடை அளவு சரிபார்க்கப்பட்டது. இந்த ஆய்வின்போது சிலைகளை புகைப்படம், வீடியோக்கள் மூலம் பதிவு செய்தனர். இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த ஆய்வுப்பணிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் 4,359 சிலைகள் உள்ளன. இந்த சிலைகளின், பழமை, தொன்மை நிலை குறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 1,897 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் புள்ளமங்கை பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 5 சிலைகள் போலியானவை எனகண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவில் போலியான சிலைகள் குறித்து உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் ஆய்வு பணிகள் விரைவாக நடைபெற்றது. இதில் சிலைகளின் உலோக தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும் என்பதால் உரிய கால அவகாசம் நீதிமன்றத்தில் கோரப்படும். உலோகங்களின் விகிதாசாரம் என்பது மிக முக்கியம். அது எந்த காலத்திலும் மாறாது.

தற்போது நடைபெற்ற ஆய்வில் கி.பி. 918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவகாமியம்பாள் சிலை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலையின் அடிப்பகுதியில் அதற்கான விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திருவாரூர் அருகே வடகண்டம் கரைவீரநாதர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இதுபோன்று அனைத்து சிலைகளிலும் விவரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தால் எந்த வெளிநாடுகளுக்கும் சிலைகளை கடத்த முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இங்குள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் குளிர்சாதன வசதிகள் போன்ற குறைபாடுகள் உள்ளன. 4,359 சிலைகளும் இங்கு இருப்பதற்கான தேவையில்லை. அந்தந்த கோவில் சிலைகள் அந்தந்த கோவிலில் உரிய பாதுகாப்பு வசதியுடன் இருந்ததால் தான் மக்கள் வழிபட முடியும். பல ஆண்டுகளாக பாதுகாப்பு என்ற காரணத்திற்கு ஒரே இடத்தில் அனைத்து சிலைகளும் வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே முக்கிய கோவில்களில் சிலையை பாதுகாக்க தேவையான வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நாகை மாவட்டம் செம்பியன்மகாதேவி, திருக்குவளை போன்ற ஊர்களில் உள்ள கோவில்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதில் திருக்குவளையில் உள்ள கோவிலில் போதிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. முக்கிய சிலைகள் வைத்துள்ள அறையின் பாதுகாப்பு தன்மை பலவீனமாக இருந்தது.

எனவே கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு உரிய பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதுவரை இரவு பாதுகாப்பு பணியில் போலீசாரை பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story