சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசியதாக வழக்கு, ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு


சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசியதாக வழக்கு, ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2019 10:30 PM GMT (Updated: 7 March 2019 6:54 PM GMT)

சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதிக்கு முன்ஜாமீன் வழங்கி, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி. இவர் தற்போது டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளார். இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழக சட்டசபையின் சபாநாயகர், கொறடா ஆகியோருக்கு எதிராகவும், அவர்களை மிரட்டும் வகையிலும் நான் பேசியதாக வக்கீல் பாலமுருகன் என்பவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் எம்.எல்.ஏ. ஆக உள்ளேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். என் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே காரைக்குடி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கட்சி கூட்டத்தில் சபாநாயகரையும், கொறடாவையும் மிரட்டும் வகையில் எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி பேசியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் அவரை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்று வாதாடினார்.

பின்னர் இந்த வழக்கில், ரத்தின சபாபதி எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில், ரத்தின சபாபதி மீதான வழக்கின் அதிகாரி விசாரணைக்கு அழைத்தால், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story