சேத்தூர் பண்டாரவாடை அரசு பள்ளி வளாகத்தில் நெல் சாகுபடி மாணவர்களுக்கு செயல் விளக்கத்துடன் விவசாய பயிற்சி
சேத்தூர் பண்டாரவடையில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. விவசாய பணிகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்தார்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த சேத்தூர் பண்டாரவாடை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த பள்ளியில் அடிப்படை கல்விக்கான பாடம் நடத்துவதுடன் விவசாயம் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை பயன்படுத்தி கீரை, நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விவசாய பணிகளில் மாணவர்களை பள்ளியின் பொறுப்பாசிரியர் செல்வராஜ் ஈடுபடுத்தி வருகிறார். பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம் குறித்து தனியாக அவர் பயிற்சி அளிக்கிறார். இயற்கை விவசாயம், தோட்டக்கலை ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் அவர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பள்ளியில் ஒவ்வொரு பருவத்திலும் கீரை, நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் ஆடுதுறை-46 என்ற நெல் ரகம் பயிரிடப்பட்டது. நாற்று நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகளில் வழக்கம்போல் மாணவர்களை ஆசிரியர் செல்வராஜ் ஈடுபடச் செய்தார். மாணவர்களும் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டினர். நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் உதவியுடன் நெல் அறுவடை செய்யப்பட்டது.
இது குறித்து ஆசிரியர் செல்வராஜ் கூறுகையில், ‘பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டியது அவசியம். இளைஞர்கள் மத்தியில் விவசாயம் குறித்த ஆர்வம் குறைந்து வரும் நிலையில் இளம் வயதிலேயே வேளாண்மை குறித்த அறிவை மாணவர்களிடம் வளர்ப்பதற்காக செயல்விளக்கத்துடன் நெல்நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டது. இது வருங்காலத்தில் இந்த மாணவர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும்’ என்றார்.
Related Tags :
Next Story